​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"அக்னி பிரதர்ஸின் வேட்டை மீண்டும் தொடரும்".. இன்ஸ்டாவில் கொலையை பதிவிட்டு "கெத்து".. பழிக்குப் பழி கொலைகளால் பதற்றத்தில் பல்லடம்!

Published : Aug 11, 2024 10:23 PM



"அக்னி பிரதர்ஸின் வேட்டை மீண்டும் தொடரும்".. இன்ஸ்டாவில் கொலையை பதிவிட்டு "கெத்து".. பழிக்குப் பழி கொலைகளால் பதற்றத்தில் பல்லடம்!

Aug 11, 2024 10:23 PM

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே முகம் சிதைக்கப்பட்டு ரௌடி ஒருவன் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு கும்பலுக்கு இடையிலான பகையில் பழிக்குப் பழியாக இந்த கொலையை அரங்கேற்றிய கும்பல், அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு கெத்து காட்டியது தெரியவந்துள்ளது. 

பல்லடம் அடுத்த கரையாம்புதூரில் கடந்த வியாழக்கிழமை வினோத் கண்ணன் என்பவரை 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி தலையை முழுவதுமாக சிதைத்து கொலை செய்தது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆலங்காடு பகுதியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரான அக்னி ராஜ், கடந்த 2021 ஆம் ஆண்டு மைனர் மணி என்பவர் கொலை வழக்கில் ஒன்பதாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

ஜாமீனில் வெளியே வந்த அக்னிராஜை, 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மைனர் மணி ஆதரவாளர்கள் வெட்டி கொலை செய்தனர்.

இந்தக் கொலைக்குப் பழிவாங்க முடிவெடுத்த அக்னி ராஜின் நண்பர்கள், “அக்னி பிரதர்ஸ்” என்று ஒரு வாட்சப் குழுவை துவக்கி, பரமசிவம், ஆகாஷ், அழகுபாண்டி, ஆகியோரை அடுத்தடுத்து தலையை சிதைத்து வெட்டி கொலை செய்தனர். அதன் தொடர்ச்சியாகத்தான் வினோத் கண்ணனும் கொலை செய்யப்பட்டார்.

அக்னி ராஜ் கொலைக்கு வினோத் கண்ணனும் ஒரு காரணம் என்ற அடிப்படையில் அவரை கொலை செய்துவிட்டு, “நான்கு முடிந்துவிட்டது” என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அக்னி பிரதர்ஸ் குழுவினர், பூச்சி இருளப்பன், விக்கி, சக்திவேல், தர்மராஜ் என மேலும் 4 பேர் அக்னிராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக இருப்பதால், வினோத் கண்ணன் கொலை செய்யப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு, “மீண்டும் தொடரும் ” என்றும் பதிவிட்டுள்ளனர்.

அக்னி பிரதர்ஸ் என்ற வாட்சப் குழு மட்டுமின்றி, இன்ஸ்டாகிராமில் ajaydevan bloods, agni Spartans, அக்னி பிரதர்ஸ் போன்ற குழுக்களையும் உருவாக்கியுள்ளது இந்த கொலைகார கும்பல்.

"கதைக்கு முடிவு சொல்லலாம்... பகைக்கு" எனவும் "அக்னியின் வேட்டை அட்டகாசமாக நடக்க உள்ளது" எனவும் "சிந்திய ரத்தம் வீண் போகாது" எனவும், "பதில் தரமாக இருந்ததா" எனவும் விதவிதமாக ஸ்லோகன்களை உருவாக்கி, இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாகவே வெளியிட்டுள்ளனர்.

வினோத் கண்ணன் கொலை தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து விசாரணையில் இறங்கிய போலீசார், ராயர்பாளையத்தில் வைத்து, நித்திஷ்குமார், காளீஸ்வரன், பிரபுதேவா, சாமிநாதன்என 4 பேரை கைது செய்துள்ளனர்.

இவர்களில் பிரபுதேவாவும் சாமிநாதனும் கொலை செய்யப்பட்ட வினோத் கண்ணனின் நண்பர்கள் என்பதும் ஆந்திராவிலிருந்து தங்களைப் பார்ப்பதற்காக வினோத் கண்ணன் வருவதை கொலையாளிகளுக்குச் சொன்னதும் தெரியவந்துள்ளது.